பெருகும் போதைக் கலாச்சாரம்… புதுச்சேரியில் சிதைக்கப்பட்ட சிறுமி…-கயவர்களை கைது செய்தது எப்படி?

இந்தியா தமிழகம்

பதினாறு வயது சிறுமிக்கு புதுச்சேரியில் நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதை பதைக்க வைத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 30ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு 16 வயதான  தனது மகள் மாயமானதாக பெரியக்கடை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, புதிய எஸ்எஸ்பியாக பதவியேற்ற கலைவாணன், எஸ்.பி.இஷா சிங், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஆகியோர் தீவிரமாக விசாரித்தனர்.

3 நாட்கள் நடந்த விசாரணை மற்றும் தேடுதலை தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலையில் உடல் தளர்ந்து சோர்வுடன் முடியாமல் நடந்து கொண்டிருந்த சிறுமியை மீட்டனர்.

என்ன நடந்தது?

சிறுமியின் தாய் தந்தை கேரளாவைச் சேர்ந்தவர்கள். 2015ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். 2016ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த நிலையில் 2017ஆம் ஆண்டு தாய் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்துகொண்டார்.

இவர்கள் தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர். சிறுமிக்கு சிறு வயது முதலே அதிகளவு பணம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால்  பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை. இதனால் பள்ளி பருவத்திலேயே போதை பழக்கத்துக்கு அடிமையானார் அந்த சிறுமி.

இந்த பழக்கம் அதிகரித்து போதைக்கு அடிமையானதால் அதிலிருந்து மீட்க பெங்களூருவில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் பெற்றோர்கள் விட்டுச் சென்றனர்.

இந்தநிலையில், தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.
ஆனால் மும்பையில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறி, சிறுமியை வர வேண்டாம் என்று பெற்றோர்கள் மறுத்திருக்கின்றனர்.

எனினும் சிறுமி விடாமல் அடம் பிடித்ததால், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அவரை புதுச்சேரி வைஷாலி வீதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் தாத்தா- பாட்டி(மேற்குவங்கத்தைச் சேர்ந்தவரின் தாய் தந்தை) வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே வந்த சிறுமி அந்த தெருவில் அங்கும் இங்குமாய் நடந்திருக்கிறார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் மது எங்கே கிடைக்கும்? வாங்கித் தருகிறீர்களா என கேட்டுள்ளார்.

’சரி வாங்க நானே வாங்கித் தருகிறேன்’ என்று கூறி ஆட்டோ டிரைவர் ஒரு ரூமுக்கு அழைத்துச் சென்று மது  வாங்கிக் கொடுத்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து அச்சிறுமியை சின்னக்கோட்டக்குப்பத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பேண்ட் ஷர்ட் அணிந்துகொண்டு , ஹேர் ஸ்டைல் எல்லாம் ஆண்கள் போல் வெட்டிக் கொண்டிருந்த அச்சிறுமியை பார்த்து ஆட்டோ ஓட்டுநரின் மனைவி யார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு நண்பர் தான் என ஆட்டோ ஓட்டுநர் கூற, மனைவியும் சிறுமியை பையன் என்றே நம்பியிருக்கிறார். இதையடுத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறுமியை தங்க வைத்த ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் மது ஊற்றிக் கொடுத்து வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்.

பின்னர் அவரை அழைத்துக்கொண்டு காலை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரத்தில் உள்ள விடுதிக்கு வெளியே விட்டுவிட்டு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சென்னையை சேர்ந்த இளைஞர்கள் அந்த சிறுமியிடம் ஜாலியாக பேசி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சென்னையில் ஓரிரவு அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தனியார் நிறுவன வாடகை காரை புக் செய்து புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில்தான் புதுச்சேரி கடற்கரையில் கடும் சோர்வில்   மனமுடைந்து  சுற்றிக்கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.

குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி?

இதற்கிடையே வைஷாலி வீதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்ததில் சிறுமி ஏறிச் சென்ற ஆட்டோ எண் பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரித்ததில், கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காஜாமொய்தீன் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அந்த சிறுமியிடம் போதையில் தவறாக நடந்துகொண்டதாகவும், அவரை எங்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டேன் என்ற தகவலையும் சொல்லியிருக்கிறார்.

பின்னர் அங்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் சென்னை இளைஞர்கள் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த சிறுமி மீட்கப்பட்ட இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அவர் வாடகை காரில் வந்து இறங்கியது தெரியவந்தது.

அந்த காரை புக் செய்தவர்கள் யார் என்று ஓடிபி மூலம் கண்டறிந்து சென்னை சென்ற போலீசார் சிறுமியை அழைத்துச் சென்று வன்கொடுமை செய்த இளைஞர்களை கைது செய்தனர்.

தற்போது பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபோன்ற கொடுமை இச்சிறுமிக்கு மட்டுல்ல, இதுபோல் பல பெண்கள் புதுச்சேரிக்கு வரும் சில வெளிமாநில சுற்றுலா பயணிகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

புதுச்சேரியில் வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை காலங்களிலோ உள்ளூர் வாகனங்களை விட வெளியூர் வாகனங்களை தான் அதிகளவு பார்க்கமுடியும். இங்கு வரும் இளைஞர்கள் மது போதைக்கு ஆளாகி தவறு செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதனால் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே பயமாக இருக்கிறது என்கிறார்கள் புதுச்சேரி வாசிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது பாய்ந்த வழக்கு!

கூடுதல் அட்வகேட் ஜெனரலாக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகன் நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *