கடலூரில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் 2 கைக்குழந்தை உட்பட 4 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேரந்தவர்கள் பிரகாஷ் (35) – தமிழரசி(31) தம்பதியினர். இவர்களுக்கு ஹாசினி (1) மற்றும் 4 மாத பெண் குழந்தையும் உள்ளது.
தமிழரசியின் சகோதரி தனலட்சுமி தனது கணவர் சத்குரு மற்றும் 6 மாத ஆண்குழந்தையுடன் அருகில் உள்ள தேவனாம்பட்டினம் கிராமத்தில் வசித்து வந்தார்.
சமீபத்தில் தனலட்சுமி அவரது கணவர் சத்குருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து தனது கணவர் மீது காவல்நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். மேலும் நேற்று இரவு சத்குருவை பிரிந்து கைகுழந்தையுடன் செல்லாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி தமிழரசி வீட்டிற்கு வந்து தங்கி உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனலட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு சத்குரு பேசியுள்ளார். பின்னர் நேரடியாகவே தமிழரசியின் வீட்டிற்கு வந்து பேசியுள்ளார்.
ஆனால் அது சண்டையாக மாறவே, ஆத்திரத்தில் பைக்கில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீதும், தன்மீதும் ஊற்றிவிட்டு வீட்டை பூட்டி கொண்டு தீ வைத்தார்.
சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து போலீசார் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழரசி, அவரது குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் 6 மாத ஆண் குழந்தை மற்றும் சத்குரு என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தனலட்சுமி, தனலட்சுமியின் அம்மா செல்வி ஆகியோர் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலூர் முதுநகர் போலீசார் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் குடும்ப தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் தான் சத்குரு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் பேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் மனு!
“உங்கள் தந்தையாக சொல்கிறேன்”: புதுமைப் பெண் திட்டத்தில் முதல்வர் பேச்சு!