திடீரென பாய்ந்த கரடி… காவலருக்கு பலத்த காயம்!

தமிழகம்

முதுமலை காப்பக வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை கரடி தாக்கியதில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரியில் முக்குருத்தி தேசியப் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் , நீலகிரி வனக்கோட்டம் என வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

மூன்று மாநில எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 688 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. முதுமலை காப்பகத்தில் ஒரு கள இயக்குநர், 3 இணை இயக்குநர், 10-க்கும் அதிகமான வனச்சரகர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், தீ தடுப்புக் காவலர்கள் என நூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

எனினும் அங்கு அடிக்கடி வனவிலங்குகளின் தாக்குதல் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. முதுமலை, தெப்பக்காடு வனசரக பகுதியில் வன வேட்டை தடுப்பு காவலர்கள் மாரி, மதன், மாதேஷ் உட்பட நான்கு பேர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த கரடி எதிர்பாராத விதமாக திடீரென வந்து வேட்டை தடுப்பு காவலர்களை தாக்க தொடங்கியது. இதில் காவலர் மாரி தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர்.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு மசனகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் வித்யா ஆகியோர் காயமடைந்த காவலர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதே பகுதியில், கடந்த மே மாதத்தில் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கரடி தாக்கியதில் பொம்மன் என்ற காவலர் கையில் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *