மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பூர் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்.
விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தவுடன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திரும்பி கொண்டிருந்தவர்கள் மாயனூர் கதவணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது ஒரு மாணவி காவிரி ஆற்றில் இறங்கினார். அங்கு சுழல் இருந்ததை அறியாததால் அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது 3 மாணவிகள் அவரை காப்பாற்ற ஆற்றில் இறங்கினர்.
அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மற்ற மாணவிகள் இதைப் பார்த்து கூச்சல் போட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து மாணவிகளை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனாலும் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து கரூர், முசிறி ஆகிய பகுதிகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
ஆற்றில் 2 மணி நேரமாக தேடிய பிறகு 4 மாணவிகளும் ஒவ்வொருவராக சடலமாக மீட்கப்பட்டனர். தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் இறந்தனர். இனியாவும் லாவண்யாவும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
தமிழரசி 7ஆம் வகுப்பும் சோபியா 8 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும், அதை மாணவிகள் கவனிக்காமல் இறங்கியதாகக் கூறப்படுகிறது. 4 மாணவிகள் பலியான சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டு போட்டிகளுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டுக்கு வராமல் எதற்காக அணைக்கு அழைத்து சென்றீர்கள் என்ற கேள்வி எழுப்பினர்.
15 மாணவிகளையும் உடற்பயிற்சி ஆசிரியரும் இன்னொரு ஆசிரியரும் அழைத்து சென்றுள்ளனர். மாணவிகளை அழைத்துச் சென்று அலட்சியமாக செயல்பட்டதாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய இப்ராஹிம், ஆசிரியர் திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். 4 மாணவிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கலை.ரா
1.. 1.. 1.. வரலாற்று சாதனை படைத்த இந்தியா!
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை!