அதிகாலை துயரம் : பட்டாசு வெடித்து விபத்து – 4 பேர் பலி!
நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவில் உள்ள வீட்டில் பதுக்கிப் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே மோகனூர், மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் தில்லை குமார். இவரது மனைவி பிரியா, தாய் செல்வி. தில்லை ஃபயர் வொர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாளை (ஜனவரி 1) புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதற்காக பட்டாசுகள் நிறைய விற்பனையாகும் என வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததாகவும், இதில் நாட்டு வெடிகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவு மாடியில் தில்லை குமாரும், தரை தளத்தில் தாய், மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் உறங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. இதனால் பயங்கர சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர்.
அதோடு இந்த விபத்தால் வீட்டிலிருந்த சிலிண்டரும் வெடித்துச் சிதறியதில் வீட்டின் கட்டிடமே இடிந்து விழுந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ அருகில் இருக்கும் 4 வீடுகளுக்கும் பரவியிருக்கிறது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தால், தில்லை குமார், அவரது மனைவி, தாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களது 3 வயது மகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லைகுமாரின் பக்கத்துவீட்டில் வசித்து வந்த பெரியக்கா என்பவரும் இவ்விபத்தில் உயிரிழந்தார். அதோடு அக்கம்பக்கத்திலிருந்த 11 பேர் காயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
அதுபோன்று சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், மோகனூர் வட்டாட்சியர் ஜானகி ஆகியோர் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தினர். திடீரென பட்டாசு வெடித்ததற்குக் காரணம் என்ன? எதற்காக வீட்டில் பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டது? வேறு யாரேனும் இந்த விபத்துக்குக் காரணமாக இருப்பார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியா
ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் பதிவு: கடுப்பான ரிஷப் பண்ட் ரசிகர்கள்!
உதயநிதியை அமைச்சராக்கியது ஏன்? : பிடிஆர்