1 லட்சம் மெகா தடுப்பூசி முகாம்: சுற்றிச் சுற்றி ஆய்வு செய்யும் அமைச்சர் மாசு

தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வரும் 34 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை அன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்றும், இதனால் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதற்காகவும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இன்று வேலூரில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் யாரெல்லாம் செலுத்திக் கொள்ளவில்லையோ அவர்களது பெயரை பட்டியலிட்டு இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 96.99 சதவீதம் பேர் முதல் தவணை, 89.50 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் 3.50 கோடி மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அவர்களை இலக்காக வைத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதல் தவணை 102.4 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 109.5 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதல் தவணை 82.5 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 62.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

15-17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதல் தவணை 87 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 70 சதவீதம் பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் வேலூர் மாவட்டம் நிர்ணயித்த இலக்கை தாண்டி தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி வருகிறது” என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில், தற்போது 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றது.

கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை இன்று நடந்துகொண்டிருக்கும் முகாம் மூலம் மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனை தொடர்ந்து வேலூரில் பல இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். ஆம்பூரில் இந்து மேல்நிலைபள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பாக தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் இடையம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மோனிஷா

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்: ஆளுநர் வேண்டுகோள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.