சென்னை வங்கிக் கொள்ளை: மொத்த தங்க நகையும் மீட்பு!

தமிழகம்

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.70 கிலோ தங்க நகைகளையும் கொள்ளையர்களிடம் இருந்து தனிப்படை போலீசார் முழுமையாக மீட்டுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 13ஆம் தேதி ரூ.16 கோடி மதிப்புடைய 31.7 கிலோ நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியரான முருகன் என்பவர் தன்னுடன் இரு நபர்களை அழைத்து வந்து வங்கி மேலாளர் மற்றும் பிற அலுவலர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக முருகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 15 நபர்களிடம் நான்கு தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

முக்கிய குற்றவாளி முருகன் கைது!

இந்நிலையில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் நேற்று (ஆகஸ்டு 15) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீதமுள்ள நகைகளை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கோவை மற்றும் விழுப்புரத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

மொத்த தங்க நகையும் மீட்பு!

அதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரத்தில் கொள்ளையரில் ஒருவனான சூர்யாவின் நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13.7 கிலோ தங்கத்தை தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். இதன்மூலம் சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகளையும் கொள்ளையர்களிடம் இருந்து முழுமையாக மீட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுவரை இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *