சென்னையில் 300 டன் பட்டாசு கழிவுகள் குவிந்துள்ள நிலையில், இரவோடு இரவாக இதுவரை 100 டன் பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டில் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பது, புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது, இட்லி மட்டன் கறியுடன் ஒரு புடி என தீபாவளி கொண்டாட்டமாகவே அமைந்தது.
எனினும் மற்ற பண்டிகைகள் போல் இன்றி தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவது மட்டுமின்றி, தெருவெங்கும் குவியல் குவியலாய் பட்டாசு கழிவுகள் குவிந்து விடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பட்டாசு வெடிக்கப்பட்ட நிலையில், இரவு முதலே பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு குப்பைகளை அள்ளி அதற்கு உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அளித்த தகவலின்படி, ”நேற்று இரவு முதல் நடந்து வரும் பணியில் இதுவரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 300 டன் பட்டாசு கழிவுகள் குவிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் இன்னும் 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த பட்டாசு கழிவுகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி அருகே ஆலைக்கு கொண்டு சென்று அழிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா