சென்னையில் 30 சதவீதம் பேருந்துகள் இன்று (டிசம்பர் 5) இயங்குகிறது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீர் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் தேங்கியுள்ள நீரால் சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் 30 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நாம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்கு மின் விநியோகம் மிகவும் முக்கியம். 85 சதவீதம் பகுதிகளில் மின் விநியோகம் சீராகியுள்ளது. முக்கியமான சாலைகளில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தைப் பொறுத்தவரையில் மெட்ரொ ரயில்கள் நேற்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. இன்றும் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயங்குகின்றன. தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் மழைநீர் இன்னும் வடியவேண்டும் என்பதால் 30 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சில பகுதிகளுக்குப் படகுகள் மூலமாக தான் போக முடியும். உதாரணமாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு காசிமேட்டில் இருந்து 15 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பால், பிரெட், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் படகு மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் மீட்கப்படுபவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
தேங்கியுள்ள தண்ணீர் குறைந்து கொண்டு வருகிறது. மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை பகுதிகளில் தான் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது. இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 73 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வெள்ளத்தில் சென்னை… களப்பணியில் அமைச்சர்கள்
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால்… படகில் சென்று மீட்பு!