நெல்லை மாவட்டம் மேல கருங்குளம் அருகே 30க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேல கருங்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலையில் சுற்றி திரியும் தெரு நாய்கள் அவ்வப்போது அந்த தோட்டத்திற்குள் புகுந்து அங்கு வளர்க்கப்படும் ஆடுகளை கடித்து விடுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தத் தோட்டத்தின் உரிமையாளர், நாய்களுக்கு சாப்பாடு வைப்பதில் விஷம் கலந்து 30க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றுவிட்டதாக ஊர் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த தனியார் தோட்டத்தில் சாப்பாட்டில் விஷம் கலந்ததற்கான அடையாளமாக அங்கு விஷப்பாட்டில்கள், நாய்களுக்கு வைக்கப்பட்ட தட்டுகள், போன்றவை தோட்டத்தில் கிடந்ததாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
கொல்லப்பட்ட நாய்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஊரில் ஒதுக்குப்புறமாக போடப்பட்டுள்ளதை கண்டறிந்த பொதுமக்கள் காவல்துறைக்கும் , நெல்லை மாநகராட்சிக்கும் தகவல் தெரிவித்தனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் இறந்த நாய்களின் உடல்களை கைப்பற்றி நெல்லை அரசு கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு தான் முழு விபரமும் தெரியவரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல கருங்குளத்தில் சில வீடுகளில் வளர்க்கப்பட்ட வீட்டு நாய்களும் இரண்டு நாட்களாக காணவில்லை என்றும் அந்த ஊர் மக்கள் புகார் கூறுகின்றனர்.
நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட தனியார் தோட்டத்தின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. நெல்லையில் 30க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“ஆளுநர் அரசியல் பேசக்கூடாது”: அண்ணாமலை
“மேகதாது குறித்து விவாதிக்கவில்லை” : துரைமுருகன்