தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் இன்று (அக்டோபர் 21) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனைதொடர்ந்து அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 18ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்தான விவாதத்தின் போது, ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி இன்று காலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் திருமலை உட்பட 3 போலீஸ்காரர்களான சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில்
சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளரின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் பயணம்: பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு!
தமிழகத்தில் மிகக் கனமழை எச்சரிக்கை!