கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டுத் திரும்பிய 3 பேரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.
கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வன்கொடுமைச் சட்டத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சரவணம்பட்டியைச் சேர்ந்த ரித்தீஷ் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், நீதிமன்றத்துக்குத் தினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என்று ரித்தீஷுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி கையெழுத்துப் போடுவதற்காக இன்று (செப்டம்பர் 12) கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார் ரித்தீஷ். அவருடன் ரஞ்சித், கார்த்திக் ஆகிய மூன்று பேரும் வந்தனர்.
நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு மூன்று பேரும் ஒரே பைக்கில் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்திலிருந்தே இவர்களை 2 இரு சக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று அபிராமி சாலை மேம்பாலம், காட்டூர் வழியாக ரித்தீஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராம் நகர் பகுதியில், ராமர் கோயில் வீதியில் தனியார் வங்கி முன்பாக மூன்று பேரையும் அந்த கும்பல் வழி மறித்தது. இதில் பைக்கில் இருந்து விழுந்து தப்பிக்க முயன்றவர்களை, தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தியைக் கொண்டு துரத்தி துரத்தி அக்கும்பல் தாக்கியது.
இதில், ரித்தீஷ், ரஞ்சித் ஆகிய இருவருக்கும் பலத்த வெட்டு விழுந்தது. கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினார். மூன்று பேரையும் தாக்கிய அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிவிட்டது.
இந்தச்சூழலில் படுகாயமடைந்து கிடந்தவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்துக்கு சென்று திரும்பியவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது ராம்நகர் பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ரித்தீஷ் குமார் மீது பாலியல் வழக்கு இருக்கும் நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத அந்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் காட்டூர் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
பிரியா
எதிர்காலத்தில் படங்களில் நடிக்க முடியாது: விஷாலுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
பட்டியலின சமையலர் : கனிமொழி ஆய்வு – முடிவுக்கு வந்த பிரச்சினை!