தேனி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதமேயான புதுமண தம்பதிகள் இன்று (அக்டோபர் 16) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகனான சஞ்சய் (24) லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது தாய்மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்குக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
லண்டனிலிருந்து தாய் மாமாவின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சஞ்சய் இன்று (அக்டோபர் 16) புதுமண தம்பதியினரைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று, ராஜா அவரது மனைவி காவியாவுடன் போடியில் உள்ள சஞ்சய் வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளார்.
சஞ்சய் போடியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரியாற்றுக் கோம்பை ஆற்றில் குளிப்பதற்காகப் புதுமண தம்பதி மற்றும் சித்தி மகன் பிரணவ் என்ற சிறுவனையும் காலை 9 மணியளவில் அழைத்துச் சென்றுள்ளார்.
கோம்பை ஆற்றில் உள்ள பதினெட்டாம்படி கேணியில் குளிப்பதற்காக நான்கு பேரும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, ராஜா கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். ஆகையால் ராஜாவை காப்பாற்றுவதற்காக மூன்று பேரும் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இடையில் சிறுவன் பிரணவ் மட்டும் உடலில் காயங்களுடன் கரையேறி அருகிலிருந்த ஒத்தக்கடை ராமராஜ் என்பவரிடம் இந்த சம்பவம் குறித்துக் கூறியுள்ளார்.
ராமராஜ் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் மூவரின் உடல்களையும் உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்து தேனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரே மாதத்தில் புதுமண தம்பதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மட்டுமல்லாது போடி மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், மலைப் பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், புதிய அருவி உருவாகியது போல் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா