3 பெண் அதிகாரிகள் : வண்ணாரப்பேட்டை சிறுமிக்கு கிடைத்த நீதி!
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பலரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர், வழக்கறிஞர், நீதிபதி என 3 பெண்கள் நீதியை நிலைநாட்டி இருக்கின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வறுமை காரணமாக தனது தாயின் தங்கையான ஷகிதா பானு வீட்டில் விடப்பட்டிருந்தார். சிறுமியாக இருந்த வரை ஒன்றும் இல்லை.
அவள் பூப்பெய்திய உடன் தான் ஷகிதா பானுவிற்கும், அவரது 2ஆவது கணவரான மதன்குமாருக்கும் ஒரு மோசமான எண்ணம் தோன்றியிருக்கிறது. அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் அது.
அதற்காக பாலியல் தொழில் செய்யும் புரோக்கரிகளிடம் தொடர்பு ஏற்படுத்திகொண்டு சிறுமியை விபச்சாரத்தில் தள்ளியிருக்கின்றனர்.
இதைவீட்டில் சொன்னால் பெற்றோரை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்.
இதனால் சிறுமி இந்தக் கொடுமையை யாரிடமும் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
கோவளத்தில் வசிக்கும் அந்த சிறுமியின் தாய் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அவரை பார்க்கவிடாமல் தடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஷகிதாபானுவுக்கும், அவரது 2 வது கணவரான மதன்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு காவல்நிலையம் வரை சென்றது. அப்போதுதான் சிறுமி விவகாரம் வெளியில் வந்தது.
காவல்துறை நேரடியாக ஷகிதா பானு வீட்டிற்கு சென்று அந்த சிறுமியை விசாரித்தபோது பல நாட்களாக தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவலை போலீசிடம் தெரிவித்தார்.
அதன்பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷிணி நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர், உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி, பாஜக பிரமுகர், தொழிலதிபர்கள் என பலர் சிறுமியை வேட்டையாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதால் அந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் காப்பாற்றிக் கொள்வதற்காக எண்ணூர் ஆய்வாளர் புகழேந்தியையும், பாஜக பிரமுகர் ராஜேந்திரனையும் ஷகிதா பானு கைக்குள் போட்டு வைத்துக் கொண்டுள்ளார்.
சிறுமியால் நாள்தோறும் பண மழை கொட்டியதால், இவர்கள் ஒரு வலைபோல தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் சிறுமியை விருந்தாக்கி இருக்கின்றனர்.
இதில் ஷகிதா பானு, அவரது சகோதரி மகள்கள் என 6 பெண்கள் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றனர்.
ஒருபக்கம் தனது துறையில், தனது அதிகாரத்தைக் கொண்ட ஒரு அதிகாரி, மற்றொரு பக்கம் அரசியல் பின்புலம் கொண்ட தொழிலதிபர்கள் என யாருக்கும் அஞ்சாமல் இந்த வழக்கை கையில் எடுத்த இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷிணி நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் ஒருவர் பின் ஒருவராக சிக்கினர்.
மொத்தம் 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் கவிதா இந்த வழக்கில் ஆஜராகினார்.
சிறுமி, அவரது உறவினர்கள், குற்றவாளிகள், அரசு தரப்பு சாட்சியங்கள் என 96 பேரிடம் விசாரணை நடத்தி 600 பக்க குற்றப்பத்திரிக்கையை இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷிணி கடந்த ஆண்டு தாக்கல் செய்தார்.
ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நீதிபதி எம்.ராஜலட்சுமி, கடந்த 15 ஆம் தேதி, மதன்குமார், ஷகிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா என்கிற கஸ்தூரி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி, காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், தனியார் தொலைக்காட்சி ஊழியர் வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தரம், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ)அஜய் கண்ணண், எஸ்.பி.ஆர்.கண்ணன் ஆகிய 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
ஆனால் இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த 21 பேருக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி நேற்று(செப்டம்பர் 26) மதியம் 12.30 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
அதில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவினரில் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும்,
போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி கண்ணன் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
சிறுமி விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் காத்திருந்த புகழேந்தி நீதிபதி தீர்ப்பை வாசித்ததும் கண்கலங்கினார்.
அவருக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைத்தண்டனையும், மைனர் எனத் தெரிந்தும் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதேபோன்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன் மற்றும் ராஜசுந்தரம் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சமும், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, கிரிதரன், காமேஸ்வரராவ் ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 லட்சம் அபராதத் தொகையுடன், தமிழக அரசு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவேண்டும் என்று நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்களுக்கு கருணையே காட்டக் கூடாது என்று தனது தீர்ப்பின் போது திட்டவட்டமாக தெரிவித்தார் நீதிபதி.
இன்ஸ்பெக்டர் பிரிதர்ஷிணி, வழக்கறிஞர் கவிதா, நீதிபதி ராஜலட்சுமி ஆகிய 3 பெண்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை பெற்றுத் தந்திருக்கின்றனர்.
சிறுமிகளிடம் அத்து மீறுபவர்களுக்கும், பாலியல் தொழிலில் தள்ளுபவர்களுக்கும் இந்த தீர்ப்பு நிச்சயம் இனி ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம்.
கலை.ரா
ஆம்னி பேருந்துகள் சேவை ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர்
ஆ.ராசாவின் நீலகிரி பயண திட்டம் ரத்து!