3 dead on Velliangiri hill

வெள்ளியங்கிரி மலையேறிய 3 பேர் உயிரிழப்பு : வனத்துறை எச்சரிக்கை!

தமிழகம்
கடந்த இரண்டு நாட்களில் வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மலை ஏறுபவர்களுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களில் வெள்ளியங்கிரி மலையும் ஒன்று.
கோவை மாநகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடம், தென்கயிலை என அனைவராலும் அறியப்பட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவிலிலிருந்து 3,500 அடி உயரம் உடைய 7 மலைகளைத் தாண்டி சென்றால், மலையின் உச்சியில் சுயம்பு சிவன் கோவில் உள்ளது.
இந்த மலையில் இரவில் வனவிலங்குகளில் நடமாட்டம் இருக்கும் என்றாலும், பங்குனி மாதத்தில் இந்த மலைக்கு இரவு நேரங்களில் அதிக பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
அந்த வகையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, உடல்நிலை கோளாறு மற்றும் மலைப் பகுதிகளில் காணப்படும் கடும் குளிர் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக அங்கு அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 24) ஐதராபாத்தைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68) என்பவர் 4வது மலையில் நடந்து சென்றபோது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தொடர்ந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 35) என்பவரும் முதலாவது மலையிலேயே உடல்நல கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரது உடல்களும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் மலையடிவாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
பின்னர், உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 25) காலை தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 40) என்பவர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறினார்.
இந்நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
அவரது உடலையும் மலை அடிவாரத்திற்குக் கொண்டு வந்த வனத்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே வெள்ளியங்கிரி மலைகளை ஏறுவதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, இதயப் பிரச்சனை, சுவாசப்பிரச்சனை, உடல்நல கோளாறு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *