ஜாபர் சாதிக்கிற்கு 3 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!

தமிழகம்

ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூலை 16) உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக கடந்த மார்ச் மாதம் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஈடுபட்டதாக கூறி டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.

பின்னர், சிறை மாற்று வாரண்ட் வழங்கி உத்தரவிட்ட நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஜாபர் சாதிக் நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் ஜூலை 29ஆம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பினாமி வீட்டில் சோதனை!

தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் அவருடைய பினாமியான ஆவடி காமராஜ் நகரைச் சேர்ந்த ஜோசப் மற்றும் ஆயிஷா என்பவர் வீட்டில் தற்பொழுது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து இருவருக்கும் அதிக அளவில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதால் சோதனை நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மீண்டும் ஆஜர்!

இதற்கிடையே 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாபர் சாதிக்கும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது “ ஜாபர் சாதிக் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். இவரிடம் முக்கிய ஆவணங்கள் பெற வேண்டியுள்ளது. மேலும் இவர் விசாரணைக்கும் ஒத்துழைக்காத காரணத்தால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது” என்று அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாபர் சாதிக் தரப்பு வழக்கறிஞர் அபுடு குமார், ”போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் மீது சென்னை, மும்பையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அதனால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்த 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுக்க முடியும் என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து ’அமலாக்கத்துறை காவலில் செல்ல விரும்புகிறீர்களா? என்று ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு விருப்பமில்லை என்றும், ஏற்கெனவே அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும் ஜாபர் சாதிக் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் வரும் 18-ம் தேதி அன்று ஒரு நாள் உறவினர்களை சந்திக்க ஜாபர் சாதிக்கிற்கு அனுமதி அளித்தும், ஜூலை 19ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அமலாக்கத் துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நீட் ஆள்மாறாட்ட வழக்கு : ஒன்றிய அரசின் மீது நீதிபதி அதிருப்தி!

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி பேரணி : பா.ரஞ்சித் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *