திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுபோன உணவு சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்ததால் காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலயத்தில் நேற்று (அக்டோபர் 6) காலை உணவு சாப்பிட்ட சிறுவர்கள் மயங்கி விழுந்தனர்.
இதில் 3 சிறுவர்கள் சேவாலயத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சேவாலயத்தை போலீசார் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் சிறுவர்களின் மரணம் குறித்து விசாரிக்க 5 விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 7) விசாரணைக் குழுக்கள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து விவேகானந்தா சேவாலயத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவர்களுக்குப் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனை அறிக்கைகள் வெளியான பிறகு குழந்தைகள் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரிய வரும்.
காப்பகங்கள் வெளியிலிருந்து மளிகை பொருட்களை வாங்கி உணவைச் சமைத்துக் கொடுக்கலாமே தவிர, சமைத்துக் கொடுக்கப்படும் உணவுகளை வாங்கக்கூடாது. அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம். இந்த குற்றத்தினையும் காப்பக நிர்வாகம் செய்துள்ளது.
காப்பகம் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. இரவு நேரத்தில் சிறுவர்களுடன் தங்குவதற்குக் காப்பகத்தில் வார்டன் இல்லை.
காய்ச்சல் ஏற்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் அவர்களாகவே மாத்திரை கொடுத்துள்ளனர். காப்பக நிர்வாகம் அஜாகரத்தையாகவும் மெத்தனப் போக்குடனும் செயல்பட்டதால் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் விவேகானந்தா சேவாலயக் காப்பகம் மூடப்படுகிறது. தற்போது காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படுவார்கள்
கெட்டுப்போன உணவு சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களுக்கு தலா 1 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு தலா 50 ஆயிரமும் திமுக கட்சியின் சார்பில் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்று அமைச்சர் கூறினார்.
மோனிஷா
போண்டா மணியிடம் ரூ.1 லடசம் அபேஸ்!
சேலம், சிவகங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகல் சோதனை!