அன்புசெழியன் வீட்டில் 26 கோடி ரூபாய் பறிமுதல்! சிக்கலில் மேலும் சில தயாரிப்பாளர்கள்!

தமிழகம்

சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 200 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாதது தெரியவந்துள்ளது. 26 கோடி ரூபாய் பணமும் 3 கோடி ரூபாய் மதிப்பில் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில், அவருக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 2ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். 2 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வந்த இந்தச் சோதனை, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவுற்றது. அப்போது, கணக்கில் வராத பல கோடி ரொக்கம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

அன்புசெழியன் வீட்டில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளதாக இன்று (ஆகஸ்ட் 6) வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 40 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத 26 கோடி ரூபாய் ரொக்கமும், 3 கோடி ரூபாய் மதிப்பு அளவில் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சோதனையின்போது கணக்கில் வராமல் ரொக்கமாக பணப் பரிவர்த்தனைகளும், முதலீடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த சோதனையின்போது பல ரகசிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து பணம், நகைகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தவிர, பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்களும் சிக்கியுள்ளன. கணக்கில் வராமல் ரொக்கமாக கொடுக்கப்பட்ட கடன்கள் தொடர்பாகவும், பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்தொகை கொடுக்கப்பட்ட பணப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளன.

இதன்மூலம் பல்வேறு வரிஏய்ப்புகளை படத் தயாரிப்பு நிறுவனங்கள் தாக்கல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சினிமா விநியோகஸ்தர்கள் எல்லாம் ஒரு குழுவாகச் சேர்ந்துகொண்டு படத்தின் வருமானத்தை குறைத்துக் காட்டி, அதன்மூலம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.

திரையரங்குகளில் உண்மையாக வந்த வருமானத்தை அவர்கள் முறையாகக் கணக்கு காட்டவில்லை. இதுபோல் பல படங்களில் அவர்கள் முறைகேடாக ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட ஃபைனான்சியர்கள், தியேட்டர் அதிபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜெ.பிரகாஷ்

7 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் தனுஷ் – அனிருத்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *