தமிழகத்தில் மழை காரணமாக இன்று (டிசம்பர் 13) 25 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக நேற்று, தென்காசி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அதன்படி நெல்லையில் உள்ள ஊத்து பகுதியில் 50 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
இது தவிர கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்று 25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், சேலம், விருதுநகர், தேனி, நாமக்கல், நாகை, கரூர், தஞ்சாவூர், திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், நெல்லை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, தஞ்சை, தூத்துக்குடி,தென்காசி, திருச்சி, விழுப்புரம், நெல்லை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.
அதே சமயம் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாணவர்கள் வெளியே சென்று செல்ஃபி எடுப்பது, நீர் நிலைகளில் இறங்கி விளையாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?