2016-ம் ஆண்டு முதல் 2020-வரை 24,134 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக நேற்று (ஜூலை 20) பதில் அளித்தார்.
அதில், “கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் 24,134 பேர் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் இதுவரை வெறும் 212 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் மட்டுமே நிரூபணமாகியுள்ளது.
2016-ல் 3,047, 2017-ல் 4,098, 2018-ல் 4, 862, 2019-ல் 5,645, 2020-ல் 6,482 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 386 பேர் நீதிமன்றங்கள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதச் செயல்களை தடுப்பதற்காக கடந்த 1967-ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(UAPA) இயற்றப்பட்டது. பின்னர், 2008, 2012 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதை இயலாத காரியமாக்கியது. இதனால், அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
~அப்துல் ராபிக் பகுருதீன்