விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு கோடைக்காலத்திற்குள் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 9) காலை வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் அவரது தலைமையிலான அரசு மும்முனை மின்சாரம் வழங்கியதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திமுக அரசும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளரை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தற்போதைய காலகட்டத்தைப் பொறுத்தவரை நமக்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மூன்று மாதங்களுக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்பதைக் கணக்கெடுக்கப்பட்டு 1,562 மெகா வாட் அளவிற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 8.50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் எந்த வித பாதிப்பு இல்லாத வகையில் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டிய சூழல் ஒரு பக்கம் இருந்தாலும் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 315 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் காலை 6-8 மற்றும் மாலை 6-10 ஆகிய நேரங்களில் மட்டும் தான் இருமுனை மின்சாரம் இருக்கும். மீதமிருக்கக் கூடிய 18 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு கோடைக்காலத்திற்குள் விவசாயிகளுக்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரு குடியிருப்பில் பெற்றிருந்தாலும் அது இணைக்கப்பட மாட்டாது. ஏற்கனவே இருக்கும் நடைமுறை படி அதே மின் இணைப்புகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அந்த நிதியை அரசு மானியமாக வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று பேசினார்.
மோனிஷா
நாடாளுமன்றத்தில் காதல் காட்சி!
அதிமுக -பாஜக கூட்டணி தொடரும்: ஜெயக்குமார்