23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!
தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு, அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மணல் குவாரிகளில் ஏற்கெனவே மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துள்ளன.
டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பான பல்வேறு விவரங்கள் அடங்கிய கடிதத்தை தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை சில நாள்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது.
பணப் பரிவர்த்தனை முறைகேடு தடுப்புச் சட்டம் பிரிவு 66(2)-ன் படி இந்தக் கடிதத்தை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
அதில், கடந்த 9 மாதங்களாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தமிழகத்தில் 2023-24 ஆண்டு காலத்தில் சட்டவிரோதமாக 23.64 லட்சம் யூனிட் (66.21 லட்சம் கியூபிக் மீட்டர்) அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகைக்கு விடப்பட்ட மணல் படுகைகளில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலமாக தனியார் ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு மணலை சட்டவிரோதமாக எடுத்தனர் என்ற விரிவான தகவல்களையும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, “ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியைவிட 10-30 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் 4.9 ஹெக்டேரில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், 105 ஹெக்டேரில் மணல் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 மாவட்டங்களில் 190 ஹெக்டேர் பரப்பளவில் 28 இடங்களில் மணல் எடுக்க குத்தகைதாரர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
அமலாக்கத்துறை தாங்கள் நடத்திய பல்வேறு ஆய்வுகள் மூலம் இந்த முறைகேடுகளை உறுதி செய்திருப்பதாகவும், குறிப்பாக செயற்கைக்கோள் படங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலமாகவும் இதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மணல் எடுக்க 273 மணல் அள்ளும் இயந்திரங்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அந்த கடிதத்தில் பட்டியலிட்டுள்ள அமலாக்கத்துறை, இந்த மணல் கொள்ளை மூலம் அரசுக்கு பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் மணல் ஒப்பந்ததாரர்கள் பெரிய அளவில் லாபம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மணல் கொள்ளை தொடர்பாக ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், 209 மணல் அள்ளும் இயந்திரங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர் சண்முகம் ராமசந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் 35-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கருப்பு சட்டையுடன் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!
திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் ஃபாக்ஸ்கான்: மத்திய அரசு நோட்டீஸ்