சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சக தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசி பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் மற்றும் டைரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சித்துராஜபுரம், விளாம்பட்டி, ஈஞ்சார், எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக சிவகாசியில் முக்கிய தொழிலான காலண்டர் தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கிடைத்த ஆர்டர்களுக்கு, குறிப்பிட்ட நாட்களில் காலண்டர்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்மழை காரணமாக ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தயாரித்த பட்டாசுகளை உலர வைத்து பேக்கிங் செய்து, விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகள் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து சிரமப்படுகின்றனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…