மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன், அணுராக் தாகூர், பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்து இந்தியா கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என அத்தனை அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் பிரச்சாரம் செய்தனர்.
இஸ்திரி போடுவது, வடை சுடுவது, தோசை சுடுவது, பரோட்டா போடுவது என தேர்தல் களம் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
சமூக வலைதளங்களிலும் ஓட்டு கேட்டு வாக்கு சேகரிக்க கூடாது என்றும் தெரிவித்தது. இதை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்தது.
தேர்தல் பணிக்காக வெளியூர் சென்றவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும்.
அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.
நாளை மறுநாள் (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் களத்தில் உள்ளனர்.
கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
6 மணிக்கு மேல அத பண்ண முடியாதாம் : அப்டேட் குமாரு
ஷங்கரின் ‘உதவி இயக்குநர்’ கிடையாது… தருண் கார்த்திகேயன் ‘பின்னணி’ இதுதான்!