அரசு வேலை : டிஎன்பிஎஸ்சி கொடுத்த மெகா ஷாக்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று (டிசம்பர் 15) 2023ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.

அதில் ஆண்டு முழுவதும் வெறும் 1754 இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது , அரசு பணிக்குத் தயாராகும் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்காகக் காத்திருப்போர்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள், 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

கடந்த நவம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18.62 லட்சம் பேரும், 19-30 வயதுக்கு உட்பட்டவர்கள் 28.30 லட்சம் பேரும் , 31-45 வரை உள்ளவர்கள் 18.31 லட்சம் பேரும் என மொத்தமாக 67,61,363 லட்சம் பேர் அரசுப் பணிக்காகக் காத்திருக்கின்றனர்.

இவர்களைத் தவிரப் பதிவு செய்யாதவர்கள், அல்லது பதிவு செய்து புதுப்பிக்காதவர்கள் என லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்காகத் தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

என்னென்ன பணியிடங்கள்?

அதில், 10 தேர்வுகள் மூலம் 1754 இடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் பிரிவில் 828 பணியிடங்கள்,

ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையில் வரும் சாலை ஆய்வாளர் பணிக்கு 762 இடங்களும்,

1+16 உதவி சுற்றுலா அதிகாரி பணியிடங்கள், புவியியல் மற்றும் சுரங்க பிரிவில் 11 உதவி இயக்குநர் பணியிடங்கள்,

பொதுப்பணித்துறையில் நிலத்தடி நீர் பிரிவில் 8 உதவி புவியியலாளர் பணியிடங்கள், தமிழ்நாடு சட்டக்கல்வி சேவை பிரிவில் 12 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்,

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் 5 உதவி ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்கள், ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் 101 பணியிடங்கள்,

தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் பொதுச் சுகாதாரத் துறையில் 2 பணியிடங்கள்,
தமிழ்நாடு தொழிலாளர் சேவை பிரிவில் 4 தொழிலாளர் உதவி அலுவலர் பணியிடங்கள்,

தமிழ்நாடு புள்ளியியல் சேவை பிரிவில் 4 புள்ளியியல் உதவி இயக்குநர் பணியிடங்கள் என மொத்தம் 1754 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியிடப்பட்டு 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குரூப் 4ல் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படும் என்று திட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இந்த எண்ணிக்கை கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவாகும். 2022ஆம் ஆண்டில் 32 தேர்வுகள் மூலம், 11,900க்கு அதிகமான பணியிடங்களுக்குத் திட்ட அறிக்கை வெளியான நிலையில் 2023ஆம் ஆண்டுக்கு 1754 பணியிடங்களுக்கு மட்டுமே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

2023 annual plan Mega shock given by TNPSC

ஆண்டுக்கு 1.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசு வேலைக்காக 67.61 லட்சம் பேர் காத்திருக்கின்றனர் என்று அரசே தெரிவித்திருக்கிறது. இவர்களில் ஒரு சதவிகித பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக இருந்தாலும் கூட 68 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

இதுதவிர ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டு 8000 பேருக்கு கூட வேலை வழங்க வாய்ப்பு இல்லை.

டிஎன்பிஎஸ்சி மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 60,000 பேராவது தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் ஓரளவு நியாயமாக இருக்கும். ஆனால் அடுத்த ஆண்டு 10 போட்டித் தேர்வுகள் மூலம் 1,754 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

குரூப் 4 தேர்வில் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக்கொண்டாலும் மொத்தமாக 7 ஆயிரம் பேருக்கு கூட வேலை கிடைக்காது.

2022ஆம் ஆண்டில் 30 வகையான பணிகளுக்குப் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டில் அதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் 11 போட்டித் தேர்வுகளை மட்டுமே அறிவிப்பது நியாயமல்ல.

மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுகள், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வுகள், கூட்டுறவுத் துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கான தொகுதி 3ஏ தேர்வுகள் ஆகியவை அடுத்த ஆண்டு நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இ.ஆ.ப., இ.கா.ப உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்படும் நிலையில், தமிழகத்திலும் அதேபோல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் முதல் தொகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாததால் தகுதியும், திறமையும் உள்ள பலர் வயது வரம்பைக் கடந்து அரசு பணியில் சேரும் வாய்ப்பை இழக்கின்றனர்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும். 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் இயல்பாக ஏற்படும் 20 ஆயிரம் காலியிடங்களையும் சேர்த்து, ஒவ்வொரு ஆண்டும் 1.30 லட்சம் பேர் அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் 10 விழுக்காட்டினரைக் கூட தேர்ந்தெடுக்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வராதது தமிழ்நாட்டுப் பட்டதாரி இளைஞர்களின் அரசுப் பணி கனவைக் கலைக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

பொறியியல் தேர்வு தேதி மீண்டும் ஒத்திவைப்பு!

“நீட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை” – அமைச்சர் நம்பிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts