இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு: தமிழ்நாடு அரசு

தமிழகம்

2023 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 14) வெளியிட்டார்

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ’தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023’ (Tamil Nadu Organic Farming Policy 2023) வெளியிட்டார்.

முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக் கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, ’வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு’ ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டன.

அதன் முதற்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை – உழவர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அங்கக வேளாண்மைக் கொள்கையினை வரையறுப்பதற்காகக் குழுக்கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன.

அக்கூட்டங்களில், அங்கக வேளாண்மைக் கொள்கையினை வகுப்பதற்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், துறைத் தலைவர்கள், முன்னணி அங்கக விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோர்களின் ஆலோசனைகள், பிற மாநிலங்களில் அங்கக வேளாண்மையில் கையாளப்பட்டுவரும் நடைமுறைகள், அதன் சாதக பாதகங்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அதிகரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் இரா.பிருந்தாதேவி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை கூடாது : நீதிமன்றம்!

செல்ஃபியால் பறிபோன இளைஞரின் உயிர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.