ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அவசர தேவைக்காக ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற ரூபாய் நோட்டுக்கள் போதுமான அளவில் புழக்கத்திற்கு வந்தவுடன் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தியதன் நோக்கம் நிறைவடைந்துவிட்டது. இதனால் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மே 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இருப்பினும் ரூ.2000 நோட்டுக்கள் வங்கிகளில் செலுத்தி அதற்கு மாற்றாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுக்களை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கடைகள், வணிக வளாகங்களில் ரூ.2000 நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
இதனால் பொதுமக்கள் தங்கள் கைவசம் இருந்த ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்று ரூபாய் நோட்டுக்களை பெற்றனர். கடந்த வாரம் பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளிடம் ரூ.2000 நோட்டுக்களை வாங்க கூடாது என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. அதேபோல பெட்ரோல் பங்க்கில் ரூ.2000 நோட்டுக்கள் பெறப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியானது.
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 93 சதவிகிதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள வங்கிகளுக்கு சென்று ரூ.2000 நோட்டுக்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செல்வம்