அடுத்தடுத்து 4 வீடுகளில் கைவரிசை… 3 தனிப்படைகள் விசாரணை!
புதுக்கோட்டை இலுப்பூரில் அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டை உடைத்து 200 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆசிக் அசன் முகமது என்பவர் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதுக்கோட்டை சென்றுள்ளார். நேற்று காலை ( ஜூலை 24 ) 10 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மருத்துவரை தொடர்புகொண்டு, மருத்துவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார் . வீட்டிற்கு விரைந்து வந்த மருத்துவருக்கு, அலமாரியை உடைத்து 200 சவரன் நகை மற்றும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
மருத்துவரின் வீடு மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள அடுத்தடுத்து மூன்று வீடுகளிலும் இரண்டு இருசக்கர வாகனங்கள், 10 சவரன் நகை மற்றும் 50,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதாபாண்டி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகையையும் சேகரித்து சென்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றவியல் காவலர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும், கண்ணவாசல் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் மற்றும் இலுப்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் என மூன்று தனிப்படைபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெறும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா