பாம்பன் பாலத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக, இன்று (அக்டோபர் 20) அதிகாலை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனர்.
ராமேஸ்வரம் மாவட்டத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்தும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் சாலை பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களை ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து வந்த ராமேஸ்வரம் காவல்துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பன் பாலத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக விபத்து நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியில் மழை பெய்ததால், பாம்பன் பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாம்பன் பாலத்தில் தொடர்ச்சியாக விபத்து நடைபெறுவதால், சிசிடிவி கேமரா அமைத்து, 24 மணி நேரமும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செல்வம்
உக்ரைனில் உள்ள இந்தியர்கள்: விரைவில் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!
ஆடைத் துறையில் நிதி நெருக்கடி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!