பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 4 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் இருக்கும் ராணுவ முகாமில் ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த முகாமில் நேற்று (ஏப்ரல் 12) அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் கமலேஷ் மற்றும் யோகேஷ் குமார் ஆகிய 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த கமலேஷ் பி.ஏ பொருளாதாரம் படித்து விட்டு கடந்த 4 வருடங்களாக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
நெசவுத் தொழிலாளியான ரவி-செல்வமணி ஆகியோரின் 2வது மகனான கமலேஷ் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
மற்றொரு ராணுவ வீரரான யோகேஷ் குமார் தேனி மாவட்டம் மூணாண்டி பட்டியைச் சேர்ந்தவர்.
ராணுவ வீரர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இன்று இரவுக்குள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ள்து.
ராணுவ முகாமில் இருந்து கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி 28 தோட்டாக்களும் ஒரு இன்சாஸ் துப்பாக்கியும் காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு குறித்து பீரங்கி படையின் மேஜர் அசுதோஷ் சுக்ல, “துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு சென்றபோது, குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்த இருவர், நாங்கள் வருவதைக் கண்டு அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.
அவர்களில் ஒருவர் கையில் இன்சாஸ் துப்பாக்கியும் மற்றொருவர் கோடாரியும் வைத்திருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் இன்று மேலும் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து பலியானார்.
ராணுவ மையத்தில் தங்கியிருந்த 20 வயதுடைய குர்தேஜஸ் லகுராஜ் என்ற வீரர் துப்பாக்கியில் தவறுதலாக சுட்டதில் உயிரிழந்தார் எனவும் அவரது மரணத்திற்கும், 4 ராணுவ வீரர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
திருச்சி மாநாடு போஸ்டர்களில் சசிகலா? ஓபிஎஸ் போட்ட உத்தரவு!
இந்தியை திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி