தூத்துக்குடி காதல் தம்பதி கொலை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 4) சரணடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (23), திருவிக நகரை சேர்ந்த கார்த்திகா (21) இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு கார்த்திகாவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டியில் திருமணம் செய்து கொண்டு, மீண்டும் தூத்துக்குடி திரும்பியுள்ளனர். இருவரும் மாரிசெல்வத்தின் வீட்டில் அவரது பெற்றோருடன் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 2) வீட்டில் மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா தனியாக இருந்த போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இந்த கோடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலையாளிகளை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையில் கார்த்திகாவின் பெற்றோருக்கு கொலையில் தொடர்பிருப்பதாக காவல்துறைக்கு தெரிய வந்தது. இதனையடுத்து கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து ஒரு சிறுவன் உட்பட இசக்கி ராஜா, ராஜபாண்டி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாரிச்செல்வம் – கார்த்திகா கொலை வழக்கில் கருப்பசாமி, பரத் ஆகிய இருவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நாங்க தோக்கணும்னு வேண்டிக்கங்க… இல்லேன்னா மொத்தமா வெளில அனுப்பிருவோம்!