சென்னையில் மழைநீர் தேங்கியதால் கணேசபுரம், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
குறிப்பாக மழைகாலம் என்றாலே பெரிதும் பாதிக்கப்படும் சென்னையில், இந்தாண்டு தமிழக அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு இடங்கள் தப்பியுள்ளன.
சுரங்கப் பாதையில் சிக்கிய பேருந்து!
எனினும் தொடர் மழையால் சில இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
அதன்படி நேற்று கனமழையினால் சென்னை வியாசர்பாடி அருகே உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதில் பிராட்வே பகுதியில் இருந்து மூலக்கடை நோக்கி சென்ற 642c என்ற மாநகரப் பேருந்து சிக்கிக் கொண்டது.
மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கத்தில் சிக்கிய பேருந்தை போக்குவரத்து போலீசார் மீட்டனர்.
சுரங்கப் பாதைகள் மூடல்!
இதனைதொடர்ந்து தற்போது கணேசபுரம் உட்பட 2 சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், அதில் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்!
ரங்கராஜபுரம் சுரங்க பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல் கணேசபுரம் சுரங்கபாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும்,
வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கமலுக்கும், ரசிகருக்கும் இடையே நடந்த ‘அடையாள’ கலாட்டா!
தொடரும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?