முதல்வர் ஸ்டாலின் இன்று(நவம்பர் 22) காலை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல் பூங்காவைத் திறந்து வைத்த நிலையில், தமிழகத்தில் மேலும் 2 டைடல் பூங்கா விரைவில் கட்டப்பட இருக்கிறது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் M/s. Webberax Solutions Pvt. Ltd., M/s. Dotnix Technologies LLP ஆகிய நிறுவனங்களுக்கு இப்பூங்காவில் தள ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர்,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பொதுவசதிகளை சென்னை மாவட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000 தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில் ” தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை வட சென்னை மற்றும் வட மேற்கு சென்னையை வளர்ச்சியடைய வைப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
இப்போது பட்டபிராமில் திறந்து வைக்கப்பட்டுள்ள டைடல் பார்க் மற்றும் தற்போது தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மற்றும் வருங்காலத்தில் வரவிருக்கிற டைடல் நியோ பூங்காக்கள் தமிழ்நாட்டின் எல்லா மூலைக்கும் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்கும்
டைடல் பூங்காவில் பெரிய நிறுவனங்கள் செயல்பட முடியும், டைடல் நியோவில் சிறிய நிறுவனங்கள் செயல்பட முடியும். அந்த வகையில் மதுரை மற்றும் திருச்சியிலும் டைடல் பூங்காக்கள் விரைவில் வரவிருக்கின்றன” என்றார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வரமுடியாது : கே.பாலகிருஷ்ணன் பேட்டி!
பதினெட்டாம்படியில் நிற்கும் சிங்கம் : யார் இவர்?
நெல்லையை தொடர்ந்து கும்பகோணம்… திண்டுக்கல் சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!