கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சுமார் 2000 பேர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர்.
அப்போது அது கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை போராட்டக்காரர்கள் எரித்து சாம்பலாக்கினர்.
இந்த வழக்கில், வாட்சஸ் அப் குழு அமைத்து போராட்டக்காரர்களை ஒன்று சேர்த்ததாக ஏராளமானவர்களை போலீஸ் கைது செய்தது. அதேபோல அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு மற்றும் ஐவதகுடியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஆகிய 2 பேரை போலீஸ் கைது செய்து இருக்கிறது.

இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ஜாமின் மனுக்களை விழுப்புரம் நீதிமன்றம் 4 முறை தள்ளுபடி செய்த நிலையில் 5 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதனை விசாரித்த நீதிமன்றம் பள்ளி தாளாளர், ஆசிரியர்களை கைது செய்தது ஏன்? உரிய விளக்கம் தராவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக நேரிடும் என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்: ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!