பல கோடி ரூபாய் மதிப்பிலான 15 தொன்மையான உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர்.
சிற்பக்கலைக்கு பெயர்போன தமிழகத்தில் இருந்து ஏராளமான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
பல சிலைகளை வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் இருந்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
அதேபோன்று இங்கிருந்து சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுரேந்திரா என்கிற தரகர் மூலம் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு நபரிடம் தொன்மையான சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலைகளை வாங்குபவர்கள் போல் நடித்து சுரேந்திரா கூறிய முகவரிக்கு சென்று சிலைகளை வாங்குவது போல நடித்து சுரேந்திராவை கைது செய்ய முயன்றனர்.
போலீசார் சுற்றி வளைத்ததை தெரிந்து கொண்ட சுரேந்திரா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
தரகர் சுரேந்திரா அளித்த முகவரியில் வசித்து வந்த ரமேஷ் பாந்தியா என்பவரை பிடித்து விசாரணை செய்த பொழுது திருவான்மியூர் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளில் ஏராளமான சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அங்கிருந்த சிலைகளை ஆய்வு செய்தபோது அதில் 15 உலோக சிலைகள் தொன்மையானது எனவும் அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து 15 சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பிடிபட்ட ரமேஷ் பாந்தியாவிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பிச்சென்ற தரகர் சுரேந்திராவை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சுரேந்திரா சிக்கினால்தான் இந்த சிலைக்கடத்தலில் எவ்வளவு பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இதுவரை எவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டிருக்கிறது. வேறு எங்கெல்லாம் சிலைகள் பதுக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவரும்.
கலை.ரா
மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு: விசாரிக்கிறது கோவை தனிப்படை!
மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!