கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மர்ம மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
இந்த சம்பவத்தில் பள்ளியின் பேருந்துகள் கொளுத்தப்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. மாணவ, மாணவிகளின் அனைத்து ஆவணங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி கலவரம் திட்டமிட்ட வன்முறை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ‘வன்முறைக்கு காரணமான வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியவர்கள், பொய்யான செய்திகளைப் பரப்பியவர்கள், வன்முறை நிகழ்த்தியவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில், ஆவடி 5வது பட்டாலியன் காமண்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கிங்ஸிலின், விழுப்பும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமணிகண்டன், நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி உட்பட 18 கொண்ட குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழுவுடன் தடயவியல் நிபுணர் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களும் தொடர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- க.சீனிவாசன்