வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் மொத்தம் 4.2 கிராம் எடையுடைய 2 தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளது ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவை அனைத்தும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறியப்பட்டது.
இதனையடுத்து 2-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. அதன்படி இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கப்பட்டன.
இதில் நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, இரும்பு பொருட்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது 2 கிராம் மற்றும் 2.2 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன.
காதணி வடிவில் கிடைத்துள்ள இந்த அணிகலன்கள் எந்த காலத்தை சேர்ந்தவை, வேறென்ன உலோகங்கள் எல்லாம் இதில் சேர்க்கப்பட்டுள்ளன உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அகழாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒடிசா ரயில் விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து!