சென்னையில் பெய்த மழையால் தனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால் தமிழகத்தில் நேற்றும் இன்றும் கன மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மழைநீரை அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது வீட்டின் முன்னால் இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கியிருப்பதாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், எனது வீட்டின் முன்பு இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மூன்று மணி நேரத்திற்கு முன்பாக எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்
சந்தோஷ் நாராயணனின் ட்வீட்டிற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி , உங்களுடைய இருப்பிடத்தைப் பதிவு செய்யுங்கள். உடனடியாக தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபடுகிறோம். என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு சந்தோஷ் நாராயணன், மாநகராட்சி அதிகாரிகளுக்கு என்னுடைய முகவரியை அனுப்பியுள்ளேன். மாநகராட்சி ஊழியர்களை கவனமாக அனுப்பி வையுங்கள். மழைநீர் தேங்கிய இடத்தில் பெரிய குழிகள் மற்றும் பாம்புகள் உள்ளது. வெள்ளம் குறைந்தவுடன் தண்ணீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
செல்வம்
அரசுக்கு இழப்பு : அமைச்சரை விடுவிக்க மறுப்பு!
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!