திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரியானாவை சேர்ந்த 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்ரவரி 17) கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12 ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் மெஷினை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
போலீசார் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக ஏடிஎம்-ல் பணத்தை திருடியதும் மெஷினுக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.
வெறும் 2 மணி நேரத்தில் 72.5 இலட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் அவர்கள் தப்பிய வாகனத்தின் நம்பர் பதிவான நிலையில் அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
சந்தேகத்தின் பேரில் கர்நாடகா, குஜராத், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன்பு, கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களை நோட்டமிட்ட காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளையை ஏடிஎம் தொழில்நுட்பம் தெரிந்த கும்பல் அதிலும் குறிப்பாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேவாட் கொள்ளையைர்களே நிகழ்த்தியிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மேவாட் கொள்ளை கும்பல், ஆந்திரா வழியாக கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார், கேஜிஎஃப் பகுதியில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாராணையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கியமான இருவர் விமானம் மூலம் ஹரியானா தப்பிச் சென்றது உறுதியானது.

இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலம் மேவாட் கொள்ளை கும்பல் தலைவனான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகியோரை வடக்கு மண்டல ஐஜி யாக உள்ள கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும், கூட்டாளிகள் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
விரைவில் பிடிபட்ட 2 குற்றவாளிகளையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா : தேர்தல் ஆணையம்
பிபிசி பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை!