சென்னை அம்பத்தூர் காவல்நிலையம் எதிரே பட்டப்பகலில் கார்த்திக் என்ற 19 வயது இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த சிவானந்தா நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜா(19).
தினக்கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் அவர் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாளுடன், கார்த்திக் ராஜாவை விரட்டி உள்ளனர்.
உயிர் பயத்தில் ஓடிய கார்த்திக் ராஜாவை அம்பத்தூர் காவல்நிலையம் எதிரே சுற்றி வளைத்த கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த உதவி காவல் ஆணையர் கனகராஜ் தலைமையில், காவல் ஆய்வாளர் ராமசாமி உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உயிரிழந்த கார்த்திக் ராஜா உடலை கைப்பற்றிய போலீசார், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பழிக்கு பழியாக நடந்த கொலை!
இதனையடுத்து அம்பத்தூர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கார்த்திக் ராஜா மீது ஏற்கெனவே பல கொலை மற்றும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கார்த்திக் ராஜா மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு பழிதீர்க்கும் விதமாக இப்போது அவரது நண்பர்கள் கார்த்திக் ராஜாவை படுகொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து தப்பியோடிய கும்பலை கண்டுபிடிக்க அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இதுவரை 4 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் காவல்நிலையம் எதிரே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பைனான்சியர் வெட்டிக் கொலை: தொழில் போட்டி காரணமா?