சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து கஞ்சா, தங்கம், வைரம், ஹெராயின் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று 94.34 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பிலிருந்து சென்னை வந்த இலங்கையைச் சேர்ந்த நஜிமுதீன் என்ற பயணியிடம் நடத்திய சோதனையில், வயிற்றில் மறைத்து எடுத்து வந்த 1746 வைரக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 94.34 லட்சம் ஆகும். வைரங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தப் பயணியைக் கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திகே.ஆர். உதய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 22ஆம் தேதி ரூ.8.86 கோடி மதிப்புள்ள ஹெராயினை வயிற்றுக்குள் வைத்துக் கடத்தி வந்த தான்சானியா நாட்டுப் பயணி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி இலங்கையிலிருந்து வந்த திருச்சியை சேர்ந்த ஜெசிந்தா மேரி பிரான்சிஸ் என்ற பெண்ணிடம் இருந்து ஒன்றரை கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 61.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 4ஆம் தேதி துபாயிலிருந்து வந்த பயணியிடம் சோதனை செய்ததில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோன்று சென்னை விமான நிலையத்தில் கடத்தல் பொருட்கள் அதிகளவு சிக்கி வரும் நிலையில் நேற்று 1746 வைர கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிரியா