தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பண்டிகை நாட்களில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி விடும்.
இந்த பிரச்சனைகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்பதற்காக அரசு பண்டிகை நாட்களில் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
அதன்படி கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் எத்தனை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 10) சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து மொத்தமாக 10,518 பேருந்துகள் இயங்கவுள்ளன.
பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தமாக 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முன்பதிவு செய்துக் கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in என்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
இந்திய சினிமாவின் ’பாகுபலி’ ராஜமவுலியின் கதை!
’வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் பிட் அடித்த மாணவர்கள்: போலீசார் தீவிர விசாரணை!