ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிப்பது எப்படி?

தமிழகம்

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்களை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ”பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 நாட்கள் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு என 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்து நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 5 பஸ் நிலையங்களுக்கும் 250 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து மட்டும் 10,749 பேருந்துகளும், தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் “பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டடு முன்பதிவுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தவிர தமிழக அரசின் போக்குவரத்துதுறை மற்றும் பேடிஎம், பஸ் இந்தியா போன்ற இணையதளங்கள் மூலமும் முன்பதிவுகள் செய்யலாம்.

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ”பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள வசதியாக 9445014450, 9445014436 ஆகிய இரண்டு தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

அதேபோன்று ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 2628,0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தியேட்டர்களில் வெளி உணவு வழக்கு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

“நீதிமன்றம் கிடங்கல்ல”- நீட் வழக்கில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *