24 மணி நேரத்தில்133 ரவுடிகள் கைது!
தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷனில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் பிடிப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்காக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அண்மையில் ’ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்ற பெயரில் சோதனை நடத்தி ஏராளமான கஞ்சா வியாபாரிகளை கைது செய்ததுடன், அவர்களுடைய 2,000 வங்கிக்கணக்குகளையும் மற்றும் சொத்துக்களையும் முடக்கியது.
இதேபோன்று கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை ஒழிக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ’மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில், மின்னல் ரவுடிகள் வேட்டை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில் முக்கிய ரவுடிகள் உள்பட 133 பேர் பிடிப்பட்டனர்.
இவர்களில் கொலை, கொள்ளை வழக்குகளில் நீதிமன்ற பிடிவாரண்ட்டில் இருந்த 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, கொலை கொள்ளை, நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் தொடர்புடைய A+ பிரிவு ரவுடிகள் 13 பேரும் சிக்கியுள்ளனர். இவர்களை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மீதமுள்ள 105 ரவுடிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையின் மின்னல் ரவுடி வேட்டை தமிழகம் முழுவதும் மேலும் தீவிரமடைந்துள்ளது என டிஜிபி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
2000 ரூபாய் கள்ளநோட்டுகள்: இரிடிய மோசடி கும்பல் கைது!