பாஸ்ட்புட் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் பாஸ்ட் புட் உணவகம் செயல்பட்டு வருகிறது.
அங்கு சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த தவக்குமார், தனது 13வயது மகள் கலையரசி ஆசைப்பட்டதன் பேரில் கடந்த சனிக்கிழமை இரவு மகன் பூபதி (12), மனைவி சுஜாதா, உறவினர்கள் சுனோஜ், கவிதா ஆகியோருடன் சிக்கன் ரைஸ், ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.
மறுநாள் காலையில் அனைவரும் வாந்தி, மயக்கம், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நேற்று இரவு மூவரும் வீடு திரும்பிய நிலையில், இன்று காலையில் சிறுமி கலையரசி எழுந்திருக்கவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதே உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருக்கு ட்ரீட் வைத்துள்ளார்.
அவர்கள் அனைவரும் ஷவர்மா, பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்ட நிலையில், இன்று அதிகாலை வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உணவகத்தில் சாப்பிட்ட 6 மாணவிகள், 8 மாணவர்கள் என 14 பேரையும் உடனடியாக மீட்டு நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
உடல்நலக்குறைவுக்கு புட் பாய்சன் ஆனதே காரணம் என தெரியவந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார் ஆட்சியர் உமா.
அங்கு சமையல் செய்ய கெட்டுப் போன இறைச்சியை வைத்திருந்ததும், ஷவர்மா செய்ய பயன்படுத்தும் இயந்திரம் அசுத்தமாக இருந்ததும் தெரியவந்தது.
இதனால் டென்ஷனான ஆட்சியர் உணவகத்துக்கு சீல் வைக்கவும், கடந்த சனிக்கிழமை சாப்பிட்டவர்களின் விபரங்களை சேகரிக்குமாறு சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து கெட்டு போன இறைச்சி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், கெட்டுபோன இறைச்சியை பினாயில் ஊற்றி அழித்தனர்.
மேலும் ஐவின்ஸ் உணவக உரிமையாளர் நவீன் குமாரை அழைத்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
தொடந்து ஹோட்டல்களில் பயன்படுத்தும் இறைச்சிகள் பல சமயம் கெட்டுபோய் இருப்பதாக புகார் எழுந்து வந்த நிலையில், ஷவர்மா சாப்பிட்ட குழந்தை உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதும் நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அப்போ ’லவ் டுடே’… இப்போ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’
“அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை” – ஜெயக்குமார்