2,3 நாட்கள் வந்தால் தேர்வெழுத அனுமதியா?: அன்பில் மகேஷ் பதில்!

தமிழகம்

பொதுத் தேர்வின் போது இனி வரும் கல்வியாண்டுகளில் 75 சதவிகித வருகைப்பதிவு கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாட தேர்வை தலா 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதனால் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து துணை தேர்வை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இதுபோன்ற சூழலில், சென்னையில் சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒரு காலத்தில் நீக்கம் என்பது இருக்கும். குறிப்பிட்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை நீக்கிவிட்டுதான் ஹால் டிக்கெட்டே கொடுக்கப்படும். ஆனால் ஒரு நாள், இரண்டு நாள் வந்தாலும் சரி ஹால் டிக்கெட் கொடுத்து, ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களை கல்வியில் ஈடுபாட்டோடு வைத்திருக்க ஆசைப்படுகிறோம்.

மாணவர்கள் பின்வரும் காலத்தில் தன்னைத்தேர்வு எழுத அனுமதிக்காததால் படிக்காமல் விட்டு விட்டதாக கூறக்கூடாது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 18) தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இரண்டு நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவர்கள் கூட தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் கொரோனா காரணமாக ஆல் பாஸ் முறையில் வந்தவர்கள்.

அவர்களுக்கு பயம் இருக்கக் கூடாது. இந்த இரண்டு வருட காலத்தில் அவர்களுக்கான பயம் என்பது மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். மன ரீதியாக அச்ச உணர்வு இருக்கலாம் என்ற வகையில், அவர்களுக்கெல்லாம் ஒரு சிறப்பு நடவடிக்கையாக யார் யாரெல்லாம் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, எல்லோரும் வாங்க ஹால் டிக்கெட் தருகிறோம் என்று சொல்லியிருந்தோம்.

கொரோனா காலத்தில் பயப்படமால் எழுதுங்கள் என்பதற்காக இது சொல்லப்பட்டதே தவிர எல்லா ஆண்டுக்கும் பொருந்தாது. அப்படியானால் யாரும் பள்ளிக்கே வரமாட்டார்கள்.

இனி வரும் கல்வியாண்டில் 75 சதவிகித வருகைப்பதிவு தொடரும். மாணவர்கள் படித்ததில் இருந்துதான் கேள்வியை கேட்க போகிறோம். எனவே மாணவர்கள் தேர்வுக்கு வர வேண்டும்.

மொழி பாடங்களுக்கு வராத மாணவர்களை மற்ற பாட தேர்வுகளுக்கு வரவழைக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பிரியா

கொரோனா பாதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு!

5 நாட்களுக்கு மழை: வானிலை நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *