கோவை கார் வெடிப்பில் இதுவரை நடந்த சோதனையில் வெடிமருந்துகள் உள்பட 109 பொருட்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
காரில் ஒரு சிலிண்டர் வெடித்தும், வெடிக்காத மற்றொரு சிலிண்டரும் இருந்தநிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கின.
76 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்களும், சில துருப்பு சீட்டுகளும் கிடைத்ததால் இது தீவிரவாத சதித்திட்டம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஜமேஷா முபீனுடன் தொடர்பில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைனில் இவர்கள் வெடிப்பொருட்களை சிறுக சிறுக வாங்கியதும், சில தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு, சர்வதேச அளவிலான தொடர்பு இருக்கலாம் என்பதால்,
என்.ஐ.ஏ. வழக்கை விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 27) முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
தமிழக காவல்துறை இதுவரை விசாரணை நடத்திய ஆவணங்களும் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் என்.ஐ.ஏ வின் எப்.ஐ.ஆரில் பதிவான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
கார் வெடிப்பு நடந்த கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் பூசாரி சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
23 ஆம் தேதியில் இருந்து இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொட்டாசியம் நைட்ரேட், வெடிமருந்துக்கான திரி 2 மீட்டர், நைட்ரோ கிளைசின், சிவப்பு பாஸ்பரஸ், பெட்டின் பவுடர், அலுமினியம் பவுடர், ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்பர், சர்ஜிகல் கண்ணாடி,
9 வோல்ட் பேட்டரி, இரும்பு ஆணிகள், ஸ்விட்ச், பேக்கிங் டேப், கையுறைகள், ஜிகாது தொடர்பான புத்தகங்கள் போன்ற 109 பொருட்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மேலும் ஜமேஷா முபீன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் என்.ஐ.ஏ சட்டம் 2008 பிரிவு 6(5) மற்றும் பிரிவு 8 ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆரில் தகவல்கள் உள்ளன.
கலை.ரா
பந்த்க்கு அழைக்கவில்லை: நீதிமன்றத்தில் அண்ணாமலை பல்டி!
ஜெ.வை விட பன்னீருக்கு சசிகலாதான் தேவை : கே.பி.முனுசாமி காட்டம்!