மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி (19.04.2024) நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வரும் 17/04/2024 மற்றும் 18/04/2024 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 20/04/2024 மற்றும் 21/04/2024 ஆகிய தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரம்!
1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT) கிளாம்பாக்கம்
திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம். கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி. செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர். சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
2 அ. தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)
திண்டிவனம்,விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் (SETC உட்பட).
2 ஆ. வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம். வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.
3. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். டாக்டர் பேருந்து நிலையம், கோயம்பேடு
கிழக்கு கடற்கரை சாலை வழியாக (SETC உட்பட) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுச்சேரி. கடலூர் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி. ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா? வாக்கு சதவீதங்கள் என்ன சொல்கின்றன?
தோசையால் டிரெண்டான இளைஞர்… ரயிலில் அடிபட்டு பலி!