தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில்,
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 26) சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது,
“இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர், உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மதுரையில் டெங்கு பரவல் அதிகம் குறித்த கேள்விக்கு, “மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். அனைத்து துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2012 இல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017இல் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவ குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக பெரிய உணவகங்களை தவிர சிறிய உணவகங்களில் மட்டுமே சோதனை நடைபெறுகிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “எந்த கடையில் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது.
மீதமுள்ள இறைச்சியைப் பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாகும். எங்கு தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, “தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இராமலிங்கம்
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு திமுகவின் சதி: ஜான் பாண்டியன்
அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமானதல்ல: கிருஷ்ணசாமி