நாளை மறுநாள் (ஜூன் 24) தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இன்று (ஜூன் 22) ரூபாய் 30 லட்சம் செலவிலான ஹைடெக் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அந்த வகையில் கடந்த வாரம் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்தார். அதே போல் அடுத்த மாதம் மதுரையில் மிகப்பெரிய நூலகத்தைத் திறந்து வைக்கவிருக்கிறார். இப்படி படிப்படியாக பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு துறையும் நூற்றாண்டிற்கான ஒரு மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை செய்திட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் படி ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கலைஞரின் நூற்றாண்டு என்பதால் ‘கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம்’ என்று 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் மக்கள் செய்து கொள்ளலாம். சென்னையை பொறுத்தவரை 10 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 10-ல் நடைபெறும் முகாமை காலை 10 மணிக்கு நான் திறந்து வைக்க உள்ளேன்.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் 90 முகாம்கள் நடக்கவிருக்கிறது.” என்று தெரிவித்தார்.
மோனிஷா
தமிழ்நாடு – உத்தரப் பிரதேசம் : பைடனுக்கு மோடி கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்!